கல்கியுடனான சோழ தேசத்துப் பயணம்

Blogged Bliss Aug 26, 2026

பொன்னியின் செல்வன் என்ற புத்தகம் 1950 முதல் 1954 வரை அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதி வெளியிடப்பட்ட வரலாற்று நாவல். பலராலும் விரும்பப்பட்டு, இன்றுவரை மக்கள் மத்தியில் பிரபல்யமாக வாசிக்கப்படும் புத்தகம். எனது குடும்பத்தார் இது பற்றிக்கூறும் போது பொன்னி என்றால் பெண்; செல்வனென்றால் ஆண் ஆகவே இது ஒரு காதல் கதை என நினைத்தேன். ஆனால் அக்கா சொல்லித்தான் அறிந்தேன் அது காதல் கதை மட்டுமல்ல ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஓர் அரியணைக்கு ஏற்படும் போட்டி மற்றும் அதற்குள் பாண்டியர்களால் ஏற்படும் சூழ்ச்சி, சோழர் வரலாறு, நட்பு, தியாகம், காதல் என பலதை உள்ளடக்கியது என்று.

மனதிற்குள் ஏதோ ஒரு ஆவல் இதைப் படிக்க வேண்டுமென்று, அடுத்த வாரமே நூலகம் சென்று தேடிப் பார்த்தேன் சுமார் 2500 பக்கங்கள் கொண்ட ஐந்து பெரிய புத்தகங்களைப் பார்த்த பின்பும் எனது ஆவல் குறையவில்லை. புத்தகம் படிக்கும் உணர்வு எவ்வளவு அற்புதமானது என்பதை இப்புத்தகத்தைப் படித்தே நான் அறிந்து கொண்டேன். இதுவே எனது புத்தகப் பயணத்தின் முதலாவது புத்தகமாக இருந்தது.

சரி கதைக்குள் செல்வோமா, இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சோழர் குலத்தின் அரசன் சுந்தர சோழரின் பின் ஏற்பட்ட வாரிசு குழப்பம் பற்றியது.   கதையின் தொடக்கம் வானில் வெள்ளி தோன்றுகிறது. அக்கால நம்பிக்கைப்படி வெள்ளி நட்சத்திரம் தோன்றினால் அரச குடும்பத்தில் ஏதோ அசம்பாவிதம் நடக்கும். கண்டராதித்தரின் மகனான மதுராந்தகன் சிறுவயதிலிருந்தே சிவனடியாராக உள்ளார். சோழரின் பரம்பரை எதிரிகளான பாண்டியர்கள் மதுராந்தகனை பயன்படுத்தி அரசியல் சூழ்ச்சி செய்து பழி தீர்க்கப் பார்க்கின்றார்கள். சுந்தர சோழரையும் அவரின் இரண்டு மகன்களான ஆதித்தகரிகாலன் மற்றும் அருள்மொழிவர்மனையும் கொல்ல வேண்டும் என்பதே பாண்டிய சதிகாரர்களின் திட்டமாக இருந்தது. இதற்காக நந்தினியையும் வேறு சில ஆபத்துதவிகளையும் அவர்கள் சோழர் குலத்திற்குள் வைத்திருந்தனர். கல்கி அவர்கள் கதையோட்டம் சுவாரசியமாக இருப்பதற்கு பல கதாபாத்திரங்களை இக்கதையில் பயன்படுத்தி இருப்பார்.

வந்தியத்தேவன் மிக முக்கிய கதாபாத்திரம். கதையின் முதற் பாகம் தொடக்கம் இறுதிப்பாகம் வரை வரும் நபர். ஆதித்த கரிகாலனின் நண்பர். தஞ்சைக்கு நண்பருக்காகத் தூது செல்பவர். அவரது குண இயல்புகள், பேச்சுத் திறன், இக்கட்டான சூழ்நிலைகளிலும் தனது விசுவாசத்தைக் காப்பாற்றிய விதம். குந்தவைப் பிராட்டியார் மீது அவர் கொள்ளும் காதல், ஒவ்வொரு சவாலையும் தைரியத்துடன் புத்திசாலித்தனத்துடன் எதிர்கொள்ளும் திறன் இவை யாவும் என்னை அவரை நோக்கி ஈர்த்தன.

இந்நாவலின் கதாநாயகனான அருள்மொழிவர்மன், எனக்கு மிகவும் பிடித்த ஒரு கதாபாத்திரம். ஒரு மன்னன் அரியணை ஏறி நாட்டை ஆள்பவன் மட்டுமல்ல மக்களுக்காக மக்களின் நலனுக்காக சேவை புரிபவனே என்பதற்கு உண்மையான எடுத்துக்காட்டு அவர். அவருடைய அமைதியான குணம், மக்களிடம் அவர் காட்டும் அன்பு, நண்பர்களை மதித்து அவர்களிடம் வைக்கும் நம்பிக்கை, விரோதிகளை சம்பாதிக்காமல் அனைவராலும் நேசிக்கப்பட்ட விதம். அவரது கம்பீரம், வீரம், பொறுமை எல்லாமே அவரை என் மனதில் உயர்ந்த இடத்தில் வைத்தது. அவர் என்றுமே என்னுடைய மனதில் ஒரு  கனவு இளவரசராகவே இருக்கிறார்.

நந்தினி: எந்தக் குழந்தையுமே பிறக்கும்போதே தீயவராகப் பிறப்பதில்லை; அவர்கள் வளரும் சூழ்நிலையும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்களுமே அவர்களைத் தீய பாதைக்கு இட்டுச் செல்கின்றன. அவளை அனைவருமே அழகு என்று வர்ணிப்பார்கள்; ஆனால், என் பார்வையில் அவள் உள்ளூர எவ்வளவு துயரத்தில் வாடியிருப்பாள் என்றே தோன்றுகிறது. சூழ்நிலைகளும் அவள் சந்தித்த துயரங்களுமே அவளைத் தீய பாதைக்குத் தள்ளின. என்னைப் பொறுத்தவரையில், சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட ஒரு பாவமான பெண் அவள்.

ஆழ்வார்க்கடியானும் வந்தியத்தேவனும் வரும் பாகங்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கும்; அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலைத் தூண்டும். நகைச்சுவை, புத்திசாலித்தனம், அறிவுக்கூர்மை என அனைத்தையும் உள்ளடக்கி இருப்பார். தோற்றத்தைப் பார்த்து ஒருவரை மதிப்பிடக் கூடாது என்பதற்கு அவர் ஒரு பெரும் உதாரணம். எந்த அத்தியாயத்திலாவது இவர் வந்தாலே, நான் அதை மிகவும் ஆவலுடன் படிப்பேன்.

குந்தவை தேவி வாளின் கூர்மையை விட இவரின் அறிவு மிகக் கூர்மையானது. ஒரு பெண் தனது அறிவு, தொலைநோக்குப் பார்வை, நிதானம் ஆகியவற்றால் எவ்வளவு பெரிய மாற்றத்தைக் காட்டலாம் என்பதற்கு பெரும் உதாரணம் இவர்.

இவரைப் போலவே நாவலில் இன்னும் பல கதாபாத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தனிச் சிறப்பம்சங்கள் வாய்ந்தவை. அதனால்தான், ஏதோ ஒரு கதையைப் படிப்பது போல அல்லாமல், நாமும் அவர்களோடு சேர்ந்து பயணிக்கிறோம் என்ற ஓர் உணர்வு நமக்கு ஏற்படுகிறது.

ஒவ்வொரு வசனத்தை வாசிக்கும்போதும், நானே அப்புத்தகத்தின் ஒரு கதாபாத்திரமாக மாறி எல்லா இடங்களிலும் சுற்றி வலம் வந்தேன். ஆதித்த கரிகாலனுக்காக யுத்தத்தில் பங்கு கொண்டேன்; பூங்குழலிக்காகக் காதல் தூது சென்றேன்; பொன்னித்தாய் அருள்மொழிவர்மனைக் காப்பாற்றியது போல், நானும் அவரைக் காப்பாற்ற முயன்றேன். நிஜ வாழ்க்கையில்கூட நான் இப்படி ஒரு பயணத்தை மேற்கொண்டதில்லை. இன்னும் அந்தப் பயணத்தைத் தொடர வேண்டும் என்ற எண்ணம் என் மனதை விட்டு நீங்கவில்லை.

நிஜத்தில் வாழும் வாழ்க்கையை விட, புத்தகங்களுடன் வாழும் வாழ்க்கை மிக அமைதியானது. நம் வாழ்வில் நிறைவேற்ற முடியாத கனவுகளைக் கூட புத்தகக் கதாபாத்திரங்களின் மூலம் நாம் நிறைவேற்றிக்கொள்ளலாம். புத்தகம் வெறும் வரலாற்றை மட்டும் கூறவில்லை; அது வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. அருள்மொழிவர்மன் அரச குலத்தில் பிறந்திருந்தாலும், அதிகாரத்தை விட மக்கள் நலனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். வந்தியத்தேவனைப் பார்த்தால், எந்தச் சூழ்நிலையிலும் அஞ்சாமல், எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை எல்லாம் தன் புத்திசாலித்தனத்தாலும் தன்னம்பிக்கையாலும் கடந்து வந்துள்ளார். குந்தவை தேவி, வானதி, பூங்குழலி போன்ற பெண் கதாபாத்திரங்கள் தாங்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதைக் காட்டும் மிகச் சிறந்த உதாரணங்களாக விளங்குகிறார்கள்.

இந்தப் புத்தகத்திற்குப் பிறகு நான் எத்தனையோ புத்தகங்களை வாசித்துவிட்டேன். ஆனாலும், இந்தப் புத்தகத்தை வாசித்த உணர்வு இன்னும் என் மனதை விட்டு நீங்கவில்லை. நீங்கள் இன்னும் 'பொன்னியின் செல்வன்' புத்தகத்தை வாசிக்கவில்லையென்றால், இந்தப் பயணத்தை உங்கள் காலடிகளால் அல்லாமல், அதன் ஒவ்வொரு பக்கங்களாலும் தொடங்குங்கள்.

Tags

Great! You've successfully subscribed.
Great! Next, complete checkout for full access.
Welcome back! You've successfully signed in.
Success! Your account is fully activated, you now have access to all content.